பக்கங்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2012

இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்க்கும் ஊடக வன்முறை - தினமணிக்கு தமுமுக பதிலடி



                               பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மிகவும் கொடுமைக்குள்ளாகி வருவதாக இங்கு பல ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் சிறுபான்மையினருக்குப் பரிதாபப்படும் போர்வையில் இந்திய முஸ்லிம்கள் மீது விஷத்தைக் கக்கி வெறுப்பை விதைக்கும் வேலையை சில பத்திரிகை பாசிசவாதிகள் செய்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளேடு இத்தகைய விஷமக் கருத்தைத் தலையங்கமாக தீட்டியது.
உச்சக்கட்ட வெறியை உமிழ்ந்திருந்த அந்தத் தலையங்கத்திற்கு தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ மறுப்பு அனுப்பியும் தினத்தந்தி அதனை வெளியிடாமல் அடாவடித்தனம் காட்டியது.
16.08.2012 தேதியிட்ட தினமணி நாளேடும் அதே தொனியில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. பின்வரும் மறுப்பை மாநிலச் செயலாளர் பேரா. முனைவர் ஜெ. ஹாஜாகனி அனுப்பி பிறகு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுடன் விவரத்தைத் தெரிவித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் என்.ஏ.தைமிய்யாவும் தொலைபேசியில் தினமணி ஆசிரியருடன் பேசியுள்ளார். ‘இஸ்லாமிய நாடுகளிடம் மனித உரிமையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது’ என்ற தினமணியின் தலையங்க வரிக்கு அதன் ஆசிரியரிடம் தொலைபேசியில் கண்டனம் தெரிவித்தபோது, ‘பாகிஸ்தானும், வங்கதேசமும் தம்மை இஸ்லாமியக் குடியரசு நாடு என்று குறிப்பிடுவது தவறா?’ என்றார்.
‘இஸ்லாமியா நாடு என்று குறிப்பிடுவது இஸ்லாமியக் கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்தும் நாட்டையே குறிக்கும், கந்தசாமி தவறு செய்தார் என்பதற்கும், கந்தசாமி என்ற இந்து தவறு செய்தார் என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இதில் மத அடையாளத்தை வலிந்து குறிப்பிடுவது அவசியமற்றது என்பதைத் தெரிவித்தோம். நமது மறுப்பை நடுநிலைப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் தினமணி வெளியிடுமோ தெரியாது. இது சமுதாயத்தின் கவனத்திற்காக... ‘‘தினமணி 16.08.2012 தேதியிட்ட ‘இப்படிச் செய்தால் என்ன?’ என்ற தலையங்கம் படித்து மிகவும் மனவேதனை அடைந்தோம்.
சுதந்திரம் கிடைத்த வேளையில் பாகிஸ்தான் பிரிகிறது. அப்போது இந்திய முஸ்லிம்களுக்குத் தகைமைசால் தலைமைதந்த தமிழர் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிபிடம், முஹம்மதலி ஜின்னா ‘‘இந்திய முஸ்லிம்களுக்கு நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்?’’ என்று கேட்கிறார். அதற்கு ‘‘பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கண்ணியமாக நடத்துவது மட்டுமே இந்திய முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்கிற உதவியாகும்’’ என்று பதிலுரைத்தார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்.
பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ சிறுபான்மை இந்து கிறிஸ்துவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஒட்டுமொத்த இந்தியர்களும் அதைக்கண்டிக்க வேண்டும்; இதில் மதபேதங்கள் பார்க்கத் தேவையில்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அரசுகள் ஒப்புக்கொள்ள மறுத்துவருவதால் சார்புகளற்ற, சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் மூலம் உண்மைநிலை கண்டறியப்படவேண்டும். இதற்காக இந்திய முஸ்லிம்களும் அதற்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேநேரம், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதிப்பு என்ற செய்தியை எழுதும்போதெல்லாம், இந்திய முஸ்லிம்கள் சகல சவுகரியங்களுடன் சொர்க்கலோகத்தில் வாழ்வதுபோல சித்தரித்து எழுவதும், அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிபடுவதற்குக் காரணம் அவை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக இருப்பதும்தான் என்ற விஷ(ம)க் கருத்தை ஊடகங்கள் விதைக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்திய இந்துக்கள் இதற்கு எதிராகப் பெ??? வேண்டும் என மிக அநாகரீகமாக ஒரு முன்னணி தமிழ்நாளேடு (தினத்தந்தி) தலையங்கம் தீட்டியது.
சான்றாண்மை மிக்க தினமணியின் தலையங்கத்திலும் அந்த சாயல் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. தங்கள் தலையங்கத்தில், ‘‘ஒரு நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்கும்வரை சிறுபான்மையினருக்கு சட்டத்தின் பாதுகாப்பு முழுமையாகக் கிடைக்கும். அவர்கள் உடைமைக்கும், மதச் சடங்குகளுக்கும் பாதகம் ஏற்படாது என்பதற்கு இந்தியா மட்டுமே உதாரணமாகத் திகழ்கிறது. அங்குமிங்குமாக சில தவறுகள் நடந்தாலும் பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் நடத்தப்படுவதுபோல, இந்தியாவில் சிறுபான்மையினர் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதில்லை. பாபர்மசூதி இடிப்புக்குப் பிறகு சிறுபான்மையினருக்கு மேலதிகமான கவனமும் சலுகைகளும் தரப்பட்டன.’’ என்று எழுதியுள்ளீர்கள். இது சரிதானா?
‘பால் ஆர் ப்ராஸ்’ என்ற ஆய்வாளர் இந்திய நாட்டில் 1961லிருந்து நடைபெற்று வந்த இந்து முஸ்லிம் கலவரங்களை ஆய்வு செய்து இக்கால இந்தியாவின் கூட்டு வன்முறையின் வடிவங்கள், கலவரங்கள் மற்றும் இனப்படுகொலைகள் என்ற நூலை எழுதியுள்ளார். போர்க்குணத்தோடு வளர்த்தெடுக்கப்பட்ட இந்துத்துவ இயக்கங்கள், மிகுந்த திட்டமிடலோடும் ஒருங்கிணைப்போடும் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதையும், உயிர், உடைமை, உரிமை சிதைக்கப்படுவதையும் அந்நூலில் புள்ளி விவரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளார். சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதல்ல; அன்றாடம் நடக்கின்றன. இது உண்மை.
சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என ஏட்டில் எழுதியிருந்தாலும், நாட்டின் நிகழ்வுகள் முஸ்லிம்கள் நாலாந்தரக் குடிமக்களாய் நடத்தப்பட்டு வருவதை பிரதிபலிக்கின்றன. அமெரிக்கச் சிறைகளில் கருப்பர்கள் அதிகமாக இருப்பது போல இந்தியச் சிறைகளில் குரலற்ற முஸ்லிம் சமுதாயத்தினர்தான் கூட்டங்கூட்டமாக அடைக்கப்பட்டுள்ளனர். 16 ஆண்டுகள் கழித்து, குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் இழந்துவிட்ட வாழ்நாளை யார் திருப்பித் தருவார்கள்?
முஸ்லிம்களின் காவலர் எனக் கூறிக்கொள்ளும் திமுக ஆட்சியும் அண்ணா பிறந்த நாளையொட்டி கைதிகள் விடுவிக்கப்படும் போது கூட முஸ்லிம் கைதிகள் ஓரவஞ்சனை செய்யப்பட்டனரே. பாகல்பூர், மீரட், பீவண்டி, மொராதாபாத், அலிகர், மும்பை, ஜாம்ஷெட்பூர், பனாரஸ், குஜராத் என நாடெங்கும் நடந்துள்ள கலவரங்களில் பலியான முஸ்லிம்களுக்கும், இருப்பிடங்கள், உடமைகளை, இழந்தவர்களுக்கும் இதுவரை நீதி கிடைத்தபாடில்லை.
நீதிபதிகள் ஸ்ரீகிருஷ்ணா, பரேக், வாத்வா, ஜக்மோகன் ரெட்டி, டி.பி.மதன், லிபரான், என எத்தனையோ நீதியரசர்கள் கலவரத்தின் காரணகர்த்தர்களை பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டியும் கூட எவரும் தண்டிக்கப்பட வில்லையே.
ஆனால் தக்க காரணமின்றி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் சிறைக் கொட்டடியில் உள்ளனரே இதுதான் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதா?
உலகிலேயே அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்ற இந்தியாவில் அவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் அறிக்கை சகோதர தலித் சமுதாய மக்களைவிட மிக மிகப் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறி முஸ்லிம்களின் நிலையைத் துல்லியமாகப் பிடித்துக் காட்டியது. மக்கள்தொகையில் 20 விழுக்காடு வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் 3 விழுக்காடாகவும், நீதித்துறையில் 4 விழுக்காடாகவும் தான் உள்ளது. ஐதராபாத்திலும், செகந்திரபாத்திலும் ரிக்ஷா தொழிலாளர்களிடம் ‘செட்விண்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 50 ஆயிரம் ரிக்ஷா தொழிலாளிகளில் 70 விழுக்காடு முஸ்லிம்கள் என தெரிவித்தது. தலைநகர் டெல்லியில் நடைபாதைவாசிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்களே.
இந்திய நாட்டை நீண்ட நெடுங்காலம் முஸ்லிம் காவலராக தன்னைக் காட்டிக் கொள்ளும் காங்கிரசும் அதன் கூட்டணியும்தான் ஆண்டுள்ளது. ஆயினும் முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த அவல நிலை என்றால், உண்மையில் எந்த சக்தி இந்த நாட்டை ஆள்கிறது என்பதை ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்பது நீங்கள் எழுதியிருப்பது போல, இனிமையானதாக இல்லை. அதற்காக பாகிஸ்தானிலும், வங்கத்திலும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் சரிகாணவில்லை, பாகிஸ்தானிலும், வங்கத்திலும் சிறுபான்மை இந்து, கிறிஸ்தவ மக்களுக்காக, இலங்கையில் சிறுபான்மையினரான அனைத்து மதத் தமிழர்களுக்காக, இந்திய அரசாங்கம் மிக வலிமையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு இந்திய முஸ்லிம்கள் யாரையும் விட ஒருபடி மேலாக தங்கள் ஆதரவைத் தருவார்கள்.
அதேநேரம், இந்தியாவில் முஸ்லிம்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள், பாகிஸ்தானில் இந்துக்கள் நரகத்தில் வாடுகிறார்கள் என்பன போன்ற ஒப்பீடுகளை இங்குள்ள முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் தினமணி போன்ற பாரம்பரியமும், நடுவுநிலையும் உள்ள ஏடுகள் செய்யக்கூடாது என்பதை உரிமையோடு வலியுறுத்துகிறோம்.’’

-TMMK.INFO

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக