பக்கங்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2012

மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



01.09.2012 சனிக்கிழமை இராமநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மாபெரும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம். சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். ஜாஹிர் உசேன் வரவேற்புரையாற்றினார். தமுமுக மாவட்டச் செயலாளர் பி. அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், மாவட்ட துணை தலைவர் செய்யது காசிம் மரைக்காயர் மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்குறைஞர் பாலகிருஷ்ணன், ஏ. சாதிக்குல் அமீன், கே. அப்துல் ரஹ்மான் மற்றும் கே. அஜிஸ் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மாநிலச் செயலாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர்களான மதுரை மைதீன், மன்னை செல்லசாமி, ஜோசப் நொலஸ்கோ, மருத்துவ அணிச் செயலாளர் ஜே. கிதிர் முகம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் பணிகள் மற்றும் சட்டமன்ற உரைகள் அடங்கிய சிறப்பு மலரை தலைவர் ஜே.எஸ்.ரிபாயி வெளியிட முதல் பிரதியை இராமநாதபுரம் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் பெற்றுக் கொண்டார். இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் நகர் தலைவர் சுல்தான் நன்றியுரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்ட இந்த பொதுக் கூட்டத்தில் மீனவர் வாழ்வுரிமை, சிறுபான்மையினர் நலன், ராமநாதபுரம் மாவட்ட நலன் மற்றும் பொதுவானவை என பின்வரும் தீர்மானங்கள் 30 நிறைவேற்றப்பட்டன:

மீனவர் வாழ்வுரிமை தொடர்பான தீர்மானங்கள்
தீர்மானம் எண் 01: கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒருபகுதியான கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததின் காரணமாக தமிழக மீனவர்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் பறிபோகும் நிலை தினச்செய்தியாகவே மாறிவிட்டது. கச்சதீவை தாரை வார்த்து தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்த மத்திய அரசு மீண்டும் கச்சத்தீவை மீட்டு இந்தியாவின்-தமிழகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

தீர்மானம் எண் 02: இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது என கொலை வெறியோடு பேசியுள்ள மத்திய ராணுவ இணை அமைச்சரின் பேச்சை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தனது சொந்த நாட்டு மீனவர்களை நாள் தோறும் தாக்கும் அண்டை நாட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் வினோதம் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை. மத்திய ராணுவ இணை அமைச்சர் தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 03: இலங்கையிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும்
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட, காயம்பட்டு ஊனமாகியுள்ள மீனவ குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டையும், சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்குரிய இழப்பீட்டையும் இலங்கை அரசிடமிருந்து பெற்று சம்பந்தப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வழங்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. மேலும் இந்த கொலைபாதக செயல்களில் தொடர்புடைய இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணை செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசு மீனவர் பாதுகாப்பு படையை உடனே உருவாக்க வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 04: கடல் அட்டை மீதான தடையை நீக்குக
கடல் அட்டை மீதான மத்திய அரசின் தடை அர்த்தமற்றது என இப்பொதுக்கூட்டம் கருதுகிறது. எனவே பல்லாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யும் கடல் அட்டை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வாக்களித்தது போல் கடல் அட்டை மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. சங்கு, சிப்பி மீதான தடையும் நீக்கப்பட வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 05: 21 தீவுகளில் மீன்பிடிக்கும் உரிமை
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளில் பாரம்பரியமாக நமது மீனவர்கள் தொழில் செய்து வந்தார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தின் காரணமாக 21 தீவுகள் பகுதிகளிலே 500 மீட்டர் சுற்றளவில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையினால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 தீவு பகுதியில் பாசி எடுக்கச் செல்லும் பெண்களும் கைதுச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மீனவ மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்கும் இத்தடை உடனடியாக நீக்கப்பட வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 06: சங்கு மீனவர்களின் உரிமை
1983 வரை கடல் சங்கு அரசுடைமையாக இருந்தது. அப்போது கடல் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து கடலில் மூழ்கி எடுத்து வந்த சங்குகளை தமிழக அரசின் மீன்வளத்துறை குறைந்த விலை கொடுத்து கொள்முதல் செய்தது. இவ்வாறு வாங்கப்பட்ட சங்குகள் அரசின் பண்டகசாலைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்குகளின் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும். இந்த சங்குகளை விற்பனை செய்து அதில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை மேற்படி சங்குகளை கடலில் மூழ்கி எடுத்து வந்த கடல் தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் ஏழை கடல் தொழிலாளர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 07: தங்கச்சிமடத்தின் 5 மீனவர்களை மீட்க வேண்டும்
பொய் வழக்கு போடப்பட்டு கடந்த ஒன்பது மாதங்களாக இலங்கையில் சிறையில் வாடும் தங்கச்சிமடம் மீனவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க வெளிவிவகார செயலாளரை இலங்கைக்கு அனுப்பி ராஜிய ரீதியான அழுத்தங்களை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 08: இறாலை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
பல்வேறு சவாலான சூழல்களை நமது மீனவர்கள் சந்தித்து பிடித்து வரும் இறால் போன்ற கடல் உணவுக்கும் நியாயமான விலை கிடைக்காது தொழில் நசிவடையும் சூழல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு மீனவர்கள் மீது கருணை கொண்டு இறால் போன்ற ஏற்றுமதியாகும் கடல் உணவுப்பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்யவும், இறாலுக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்யவும் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

தீர்மானம் எண் 09: மீனவர்களை பழங்குடியினர் என அறிவிக்க வேண்டும்
மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவும் வாழ்வு வளம் பெறவும் மத்திய அரசு தொலை நோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும். சாதி,மதம்,மொழி கடந்து அனைத்து மீனவர்களையும் மீனவ பழங்குடியினர் ஊழயளவயட வுசiடிந என அறிவிக்க வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10 பாம்பன் தங்கச்சிமடம் இடையே தூண்டில் வளைவு
பாம்பன் தங்கச்சி மடம் கடற்பகுதிகளுக்கு இடையே வடக்கு கடலில் தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மண்டபத்தில் ஜெட்டி அருகே உள்ள பாறைகளை அப்புறப்படுத்தி அப்பகுதியை ஆழப்படுத்தி படகுகள் போக்குவரத்திற்கு வழிவகுக்க வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சிறுபான்மையினர் தொடர்பான தீர்மானங்கள்
தீர்மானம் எண் 11: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
மத்திய அரசு நியமித்த நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடும் இதர மதவழி சிறுபான்மையினருக்கு 5 விழுக்காடும் இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதே போல் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு செட்யூல்ட் இனத்தினருக்கான இடஒதுக்கீடு தொடர வேண்டுமென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மிஸ்ரா ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரையை முழுமையாக மத்திய அரசு உடனே அமுல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 12: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படுமென வாக்குறுதி அளித்தார். இவ்வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 7 விழுக்காடாக உயர்த்தித் தரப்பட வேண்டுமென தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 13: இஸ்லாத்தை தழுவும் தலித் மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்
இஸ்லாத்தை தழுவும் தலித் சமூக மக்கள் செட்யூல்ட் இன மக்களுக்கான இடஒதுக்கீடு சலுகையை இழக்கும் நிலையில் அவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் இணைத்து சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் எண் 14: டாம்கோ கடன் வட்டியில்லாமல் அளிக்க வேண்டும்
சிறுபான்மையினரின் தொழில் முன்னேற்றத்திற்காக வுயுஆஊழு மூலம் தொழிற்கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் மேலும் இக்கடனை வட்டியில்லா கடனாக வழங்கிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 15: அஸாம் மியான்மார் 
கலவரங்கள்- மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அஸாமில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கலவரங்கள் பெரும் கவலையை அளித்துள்ளன. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டு மூன்றரை லட்சம் முஸ்லிம்கள் உட்பட 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்திற்கு காரணமான போடோ தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிக்கவும் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மியான்மரில் வாழும் முஸ்லிம்கள் மீது நடைபெற்றுவரும் தொடர் வன்முறைகளை இப்பொதுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. அக்கலவரங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு மியான்மார் அரசுக்கு தேவையான நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான தீர்மானங்கள்

தீர்மானம் எண் 16: கீழக்கரை தனி தாலுக்கா
அரசு அறிவிப்போடு முடங்கிப்போன கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் ஆணையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 17: இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் பாதாள சாக்கடை
இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட இரு நகராட்சிகளையும் தூய்மை பெற துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 18: இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி
பின்தங்கிய பகுதியான இராமநாதபுரம் மாவட்ட மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரியை இராமநாதபுரத்தில் தொடங்கிட தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 19: ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஆவணச் செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 20: இராமநாதபுரத்தில் போக்குவரத்து உட்கோட்டம்
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்ட போக்குவரத்து மண்டலம் உருவாக்கிட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 21: பிளாஸ்டிகை தடைச் செய்வோம்
மண்வளம், நீர்வளம், கடல்வளம் ஆகியவற்றை பாழ்படுத்தி எதிர்கால சமூகம் வாழத் தகுதியற்றதாக இப்புவியை மாற்றிவரும் பிளாஸ்டிக் பொருட்களை எந்த வடிவத்திலும் பயன்படுத்த மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை இப்பொதுக்கூட்டம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. மேலும் மௌன அரக்கனான பிளாஸ்டிக்கை மாவட்டம் முழுவதும் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை வேண்டும் என இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 22: குப்பைகளை அகற்ற நடவடிக்கை தேவை
மாவட்டம் முழுவதும் குப்பை, கழிவுநீர் போன்றவற்றால் நிரம்பி வழிகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மழை காலத்தை கவனத்தில் கொண்டு முறையான குப்பை மேலாண்மையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொசு, பன்றி, வெறிநாய் தொல்லையும் மக்களை சிரமத்திற்குள்ளாக்குகிறது. இது விசயத்திலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 23: தங்கச்சிமடம் பாம்பன் பகுதியில் பட்டா
தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை காரணம் காட்டி பட்டா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்கி பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 24: காட்டுநாயக்கர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்பட வேண்டும்
ராஜா கிழவன் சேதுபதி மன்னர் காலத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்தல் வாழ்ந்துவரும் பழங்குடியினரான காட்டுநாயக்கர்களை பழங்குடியினமாக அங்கீகரித்து சாதி சான்று வழங்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 25: இரயில்வே துறைக்கு கோரிக்கைகள்
இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கும் பிரிவில் கூடுதல் பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் நியமிக்க வேண்டும்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் முன்பதிவு பிரிவு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் வகையில் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
இராமேஸ்வரம் - மதுரை இடையே பகல் நேரத்தில் கூடுதல் ரயில் விடப்பட வேண்டும்.
இராமேஸ்வரம் - திருப்பதி இடையே வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் விரைவு வண்டி இரு மார்க்கங்களிலும் பாம்பன் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்
சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரும் இரு விரைவு வண்டிகளும் இரு மார்க்கங்களிலும் உச்சிபுளி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும்
காரைக்குடி - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும்.
கொல்லம் - மதுரை இடையே இயக்கப்படும் ரயிலை இராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
டெல்லியிலிருந்து மதுரை வரை வரும் சம்பத்கிராந்தி விரைவு வண்டி, குர்லாவிலிருந்து மதுரை வரும் விரைவு வண்டி மற்றும் ஹவ்ராவிலிருந்து திருச்சி வரும் விரைவு வண்டி ஆகிய ரயில்களை இராமேஸ்வரம் வரை நீடிக்கப்பட வேண்டும்
பாம்பன் ரயில் நிலையத்தை புதுப்பித்து அதே இடத்திலேயே தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்
சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரும் இரு விரைவு வண்டிகளும் காலை 9 மணிக்குள் இராமநாதபுரம் வரும் வகையில் கால அட்டவணை மாற்றப்பட வேண்டும்
ஆகிய இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தென்னக ரயில்வே விரைந்து நடைமுறைப் படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பொதுவான தீர்மானங்கள்
தீர்மானம் எண் 26: அண்ணா பிறந்த நாளில் கைதிகள் விடுதலை
தண்டணைக் கைதிகளாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து சிறைவாசிகளையும் அவர்கள் இதுவரை சிறையில் கழித்த காலத்தை தண்டணையாக கருதி செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என தமிழக முதல்வரை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 27: முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் சுதந்திரமான மது விற்பனையால் ஒரு தலைமுறையே குடிகார தலைமுறையாக உருவாகிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவன் கூட மதுக்குடிக்கும் அவலம் வந்து விட்டது. வளமான தமிழகம் உருவாக திட்டமிடும் தமிழக அரசு அதற்கு வழி வகுக்க அனைத்து மதுபானக்கடைகளையும் மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 28: கிரானைட் குவாரிகள் 
அரசுடமையாக்கப்பட வேண்டும்
கிரானைட் குவாரிகள் மூலம் தனியார் பல கோடி ரூபாய் சம்பாதித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். தனியார் குவாரிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் அதற்கு துணை போனவர்கள் அனைவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 29: காவேரிப் பிரச்னை தமிழகத்திற்கு நியாயம் வேண்டும்
காவேரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தர கர்நாடகம் மறுக்கிறது. மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்திற்கு தீர்ப்பாய தலைவர் இல்லாத நிலை உள்ளது. மத்திய அரசு உடனடியாக தீர்ப்பாய தலைவரை நியமிக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 30 மக்களை வாட்டும் மின் வெட்டு
தமிழக மக்களை தொடர்ந்து வாட்டி எடுக்கும் மின்வெட்டை குறைப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மந்தமாகவே இருந்து வருகின்றன. இதனால் பலதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். போர்கால அடிப்படையில் மின்வெட்டை முற்றிலும் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக