பக்கங்கள்

புதன், 6 ஜூன், 2012

உ.பி. யில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் கதி என்ன? பதற்றத்தில் ஆஸம்கர் – கொந்தளிப்பில் காஷ்மீர்

உ.பி. யில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் கதி என்ன? பதற்றத்தில் ஆஸம்கர் – கொந்தளிப்பில் காஷ்மீர் 

 

                   உத்தரப்பிரதேச மாநிலம் ஆஸம்கரில் உள்ளது பிரபல ஜாமியத்துல் ஃபலாஹ் மதரஸா. இங்கு கல்வி பயின்று வந்த இரண்டு காஷ்மீர் மாணவர்களை உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்து மூன்று நாட்களாகியும் அந்த இளைஞர்களின் பெற்றோர்களிடமோ அல்லது அந்த மதரஸா நிர்வாகத்தினரிடமோ எவ்விதத் தகவலும் அறிவிக்கவில்லை. இந்த திடுக்கிடும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து வடஇந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை மதரஸாவின் இயக்குநர் தாஹிர் மதானி உறுதிப்படுத்தியுள்ளார். ஒன்றுவிட்ட சகோதரர்களான இரண்டு காஷ்மீர் இளைஞர்களும் தங்களது மூத்த சகோதரரை சந்திப்பதற்காக டெல்லி செல்வதற்காக கைஃபியத் விரைவு ரயிலில் செல்ல ஆஸம்கர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது.
கடந்த 24ஆம் தேதி புறப்பட்ட இரண்டு இளைஞர்களும் டெல்லி வந்து சேரவில்லை என டெல்லியில் தம்பிமார்களின் வருகைக்காக காத்திருந்த மூத்த அண்ணன் மதரஸாவிற்கு தகவல் கொடுத்ததன் பின்னர் இந்த தகவல் உலகிற்குத் தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் இருவரும் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதை உள்ளூர் நிருபர் ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது. சஜ்ஜாத் அஹ்மத் பட், வாஸிம் அஹ்மத் பட் என்ற இரண்டு காஷ்மீர் மாணவர்களும் காஷ்மீர் மாநில பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஆஸம்கரில் ஜாமியத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியில் 5 ஆண்டு அரபி பட்டப்படிப்பு கற்க வந்தவர்களை உ.பி. ATS கைது செய்துள்ளது. டைனிக் ஜாக்ரன் என்ற ஹிந்தி செய்தி ஏடு வெளியிட்டுள்ள தகவலின்படி மே 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு காஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புறப்பட்டுவரும் இரண்டு இளைஞர்கள் மிகப்பெரிய சதித்திட்டத்துடன் ஆஸம்கரில் இருந்து டெல்லி நோக்கி புறப்படுவதாகவும், அவர்களால் நாட்டிற்கே ஆபத்து ஏற்படும் என உ.பி. மாநில ஏ.டி.எஸ்.க்கு தகவல்(!) வந்ததாம். வியாழன் காலையே இந்த ரகசிய தகவல் வந்ததால் வெள்ளிக்கிழமை ஆஸம்கர் ரயில் நிலையம் பிளாட்பார்ம் எண் 3ல் காலை 6.30 மணிக்கு வந்து நிற்கும் கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறக் காத்திருக்கும் இரண்டு இளைஞர்களையும் கைது செய்ததாம். நவீன ரக ஆயுதத்துடன் சுற்றிவளைத்த ஏ.டி.எஸ்., இப்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறதாம். இவ்வாறு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே தங்கள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஜாமியத்துல் ஃபலாஹ் மதரஸா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளித்துள்ளது.
தேசம் முழுவதும் இதுபோன்ற அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை செய்யப்படுவது போலவே தங்கள் கல்வி நிறுவனத்தின் இரண்டு மாணவர்களும் துன்புறுத்தப்படலாம் எனவும் கல்வி நிறுவன இயக்குநர் மதானி, அச்சம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தினால் உ.பி. மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. Welfare Party-யின் பொதுச் செயலாளர் SQR இல்யாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் மனித உரிமைகள் பேணப்படும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? ராணுவ மயமான நடவடிக்கைகள் அப்பாவி மக்களின் மீது ஏவப்பட்ட செயல் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். மே 24ஆம் தேதி கடத்தப்பட்ட காஷ்மீர் மாணவர்களின் கதி என்ன என்பதே தெரியவில்லை. 50 ஆண்டு பாரம்பரியப் பெருமையுடைய மதரஸாவின் பெருமையை களங்கப்படுத்த நினைக்கும் ஏ.டி.எஸ்.ஸின் செயலை கடுமையாகச் சாடினார் இல்யாஸ்.
உடனடியாக அப்பாவி மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நான்கு நாட்களாகியும் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்களின் கதி என்னவென தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான் இதுகுறித்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சந்திக்க இருப்பதாக ஜாமியத்துல் ஃபலாஹ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட எவரையும் 24 மணி நேரத்தில் மாவட்ட நீதிபதி முன் நேர் நிறுத்த வேண்டும் என்ற குற்ற நடைமுறையில் சட்டம் அறிவித்துள்ளதைப் பின்பற்றாமல் நான்கு நாட்களாகியும் விடுவிக்காமல் வைத்திருப்பதைக் கண்டித்து தேசிய சிறுபான்மை ஆணையத்திற்கு சமூகநல ஆர்வலர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மை ஆணையம் உ.பி. மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசு சாசன சட்டம் பிரிவு 21 என்பது வாழ்வுரிமையைப் பறிக்க முயல்வதற்கு எதிரான உரிமையை வழங்குகிறது, மேலும் பிரிவு 22 மாணவர்களின் உரிமையை வலியுறுத்துகிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் உ.பி. மாநில ஏ.டி.எஸ்., இந்திய அரசியல் சாசனப் பிரிவு 21, 22 மற்றும் 14 முதலியவற்றை வேண்டுமென்றே மீறியுள்ளது. அப்பாவி மாணவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் நீதிக்குப் புறம்பாக இந்தக் கைது நடந்திருப்பதாக தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் புகார் அளித்த செஹ்சாத் பூனேவாலா தெரிவித்துள்ளார். ஏ.டி.எஸ்.ஸால் தங்கள் மகன்கள் கடத்திச் செல்லப்பட்ட செய்தி அறிந்து அவர்களது பெற்றோர்கள் கவலையிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.
இதனிடையே இரண்டு அப்பாவி காஷ்மீர் மாணவர்களை உடனடியாக மீட்கக்கோரி முன்னணி முஸ்லிம் தலைவர்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லா உள்ளிட்டோருக்கு முறையீடுகளை அனுப்பியுள்ளனர்.
இந்த முறையீட்டுக் கடிதத்தில் அகில மஜ்லிஸே முஷாவரத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்கான், முஸ்தபா ஃபரூக்கி, ஜாமியத்தே இஸ்லாமி ஹிந்தின் முஹம்மத் அஹ்மத் மற்றும் அப்துல் ஹமீது நோமானி, டாக்டர் எஸ்.கியூ.ஆர்.இல்யாஸ் முதலிய தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். பெருவாரியான முஸ்லிம் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தள்ள சமாஜ்வாடிக் கட்சியையும் அதன் முதல்வர் அகிலேஷ் யாதவையும் முஸ்லிம்களின் நட்பு வளையத்திலிருந்து பிரித்து சிறுபான்மை சமூகத்தின் எதிரியாக மாற்ற அதிகார வர்க்கத்தின் சில சதிகார கூட்டம் திட்டமிட்டுள்ளதன் சதித்திட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் என சமூகநல ஆர்வலர்களால் கணிக்கப்படுகிறது. அகிலேஷ் யாதவுக்கு வேண்டுமானால் இது முதல் அனுபவமாக இருக்கலாம். ஏற்கனவே முஸ்லிம்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி, ராஜசேகர ரெட்டி, மாயாவதி போன்றோரை சதிச்சூழலில் சில தீய சக்திகள் சிக்கவைத்த சம்பவங்கள் வரலாற்றில் உண்டு.
கருணாநிதி 90களின் இறுதியில், காவல்துறையில் இருந்த சில கறுப்பாடுகளால் முஸ்லிம்களை விட்டு வெகுதூரம் அந்நியப்படுத்தப்பட்டார். 1998ஆம் ஆண்டு கோவையில் நவம்பரில் நிகழ்ந்த காவல்துறை வன்முறை இன்று கருணாநிதி ஆட்சியின் கறையை நீக்க முடியா வரலாறாக மாறிற்று.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பும் அதனைத் தொடர்ந்து சூறையாடப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வும் ராஜசேகர ரெட்டி ஆட்சியின் ஒரு கரும்புள்ளியாக மாறியது. அவ்வாறே ஆஸம்கர் மாவட்டத்தில் அப்பாவி சிறுபான்மை இளைஞர்களைக் கேள்விக் கணக்கின்றி முரட்டுத்தனமாகக் கைது செய்து சித்திரவதை செய்த உ.பி. காவல்துறை மற்றும் பிற மாநில காவல்துறையையும் தட்டிக் கேட்காமல் அல்லது வேண்டுமென்றே மவுனப் பார்வையாளராக இருந்த மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சிறுபான்மையினரிடமிருந்து பிரித்த அதே சக்திகள் அகிலேஷ் யாதவிடம் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளன. அந்த தீய சக்திகளின் சதியாட்டத்தில் அகிலேஷ் யாதவ் மயங்கிடுவாரா? மண்டியிடச் செய்வாரா? நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது...

--ஹபீபா பாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக