பக்கங்கள்

புதன், 6 ஜூன், 2012

உ.பி. யில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் கதி என்ன? பதற்றத்தில் ஆஸம்கர் – கொந்தளிப்பில் காஷ்மீர்

உ.பி. யில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் கதி என்ன? பதற்றத்தில் ஆஸம்கர் – கொந்தளிப்பில் காஷ்மீர் 

 

                   உத்தரப்பிரதேச மாநிலம் ஆஸம்கரில் உள்ளது பிரபல ஜாமியத்துல் ஃபலாஹ் மதரஸா. இங்கு கல்வி பயின்று வந்த இரண்டு காஷ்மீர் மாணவர்களை உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்து மூன்று நாட்களாகியும் அந்த இளைஞர்களின் பெற்றோர்களிடமோ அல்லது அந்த மதரஸா நிர்வாகத்தினரிடமோ எவ்விதத் தகவலும் அறிவிக்கவில்லை. இந்த திடுக்கிடும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து வடஇந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை மதரஸாவின் இயக்குநர் தாஹிர் மதானி உறுதிப்படுத்தியுள்ளார். ஒன்றுவிட்ட சகோதரர்களான இரண்டு காஷ்மீர் இளைஞர்களும் தங்களது மூத்த சகோதரரை சந்திப்பதற்காக டெல்லி செல்வதற்காக கைஃபியத் விரைவு ரயிலில் செல்ல ஆஸம்கர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது.
கடந்த 24ஆம் தேதி புறப்பட்ட இரண்டு இளைஞர்களும் டெல்லி வந்து சேரவில்லை என டெல்லியில் தம்பிமார்களின் வருகைக்காக காத்திருந்த மூத்த அண்ணன் மதரஸாவிற்கு தகவல் கொடுத்ததன் பின்னர் இந்த தகவல் உலகிற்குத் தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் இருவரும் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதை உள்ளூர் நிருபர் ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது. சஜ்ஜாத் அஹ்மத் பட், வாஸிம் அஹ்மத் பட் என்ற இரண்டு காஷ்மீர் மாணவர்களும் காஷ்மீர் மாநில பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஆஸம்கரில் ஜாமியத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியில் 5 ஆண்டு அரபி பட்டப்படிப்பு கற்க வந்தவர்களை உ.பி. ATS கைது செய்துள்ளது. டைனிக் ஜாக்ரன் என்ற ஹிந்தி செய்தி ஏடு வெளியிட்டுள்ள தகவலின்படி மே 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு காஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புறப்பட்டுவரும் இரண்டு இளைஞர்கள் மிகப்பெரிய சதித்திட்டத்துடன் ஆஸம்கரில் இருந்து டெல்லி நோக்கி புறப்படுவதாகவும், அவர்களால் நாட்டிற்கே ஆபத்து ஏற்படும் என உ.பி. மாநில ஏ.டி.எஸ்.க்கு தகவல்(!) வந்ததாம். வியாழன் காலையே இந்த ரகசிய தகவல் வந்ததால் வெள்ளிக்கிழமை ஆஸம்கர் ரயில் நிலையம் பிளாட்பார்ம் எண் 3ல் காலை 6.30 மணிக்கு வந்து நிற்கும் கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறக் காத்திருக்கும் இரண்டு இளைஞர்களையும் கைது செய்ததாம். நவீன ரக ஆயுதத்துடன் சுற்றிவளைத்த ஏ.டி.எஸ்., இப்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறதாம். இவ்வாறு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே தங்கள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஜாமியத்துல் ஃபலாஹ் மதரஸா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளித்துள்ளது.
தேசம் முழுவதும் இதுபோன்ற அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை செய்யப்படுவது போலவே தங்கள் கல்வி நிறுவனத்தின் இரண்டு மாணவர்களும் துன்புறுத்தப்படலாம் எனவும் கல்வி நிறுவன இயக்குநர் மதானி, அச்சம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தினால் உ.பி. மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. Welfare Party-யின் பொதுச் செயலாளர் SQR இல்யாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் மனித உரிமைகள் பேணப்படும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? ராணுவ மயமான நடவடிக்கைகள் அப்பாவி மக்களின் மீது ஏவப்பட்ட செயல் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். மே 24ஆம் தேதி கடத்தப்பட்ட காஷ்மீர் மாணவர்களின் கதி என்ன என்பதே தெரியவில்லை. 50 ஆண்டு பாரம்பரியப் பெருமையுடைய மதரஸாவின் பெருமையை களங்கப்படுத்த நினைக்கும் ஏ.டி.எஸ்.ஸின் செயலை கடுமையாகச் சாடினார் இல்யாஸ்.
உடனடியாக அப்பாவி மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நான்கு நாட்களாகியும் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்களின் கதி என்னவென தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான் இதுகுறித்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சந்திக்க இருப்பதாக ஜாமியத்துல் ஃபலாஹ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட எவரையும் 24 மணி நேரத்தில் மாவட்ட நீதிபதி முன் நேர் நிறுத்த வேண்டும் என்ற குற்ற நடைமுறையில் சட்டம் அறிவித்துள்ளதைப் பின்பற்றாமல் நான்கு நாட்களாகியும் விடுவிக்காமல் வைத்திருப்பதைக் கண்டித்து தேசிய சிறுபான்மை ஆணையத்திற்கு சமூகநல ஆர்வலர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மை ஆணையம் உ.பி. மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசு சாசன சட்டம் பிரிவு 21 என்பது வாழ்வுரிமையைப் பறிக்க முயல்வதற்கு எதிரான உரிமையை வழங்குகிறது, மேலும் பிரிவு 22 மாணவர்களின் உரிமையை வலியுறுத்துகிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் உ.பி. மாநில ஏ.டி.எஸ்., இந்திய அரசியல் சாசனப் பிரிவு 21, 22 மற்றும் 14 முதலியவற்றை வேண்டுமென்றே மீறியுள்ளது. அப்பாவி மாணவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் நீதிக்குப் புறம்பாக இந்தக் கைது நடந்திருப்பதாக தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் புகார் அளித்த செஹ்சாத் பூனேவாலா தெரிவித்துள்ளார். ஏ.டி.எஸ்.ஸால் தங்கள் மகன்கள் கடத்திச் செல்லப்பட்ட செய்தி அறிந்து அவர்களது பெற்றோர்கள் கவலையிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.
இதனிடையே இரண்டு அப்பாவி காஷ்மீர் மாணவர்களை உடனடியாக மீட்கக்கோரி முன்னணி முஸ்லிம் தலைவர்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லா உள்ளிட்டோருக்கு முறையீடுகளை அனுப்பியுள்ளனர்.
இந்த முறையீட்டுக் கடிதத்தில் அகில மஜ்லிஸே முஷாவரத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்கான், முஸ்தபா ஃபரூக்கி, ஜாமியத்தே இஸ்லாமி ஹிந்தின் முஹம்மத் அஹ்மத் மற்றும் அப்துல் ஹமீது நோமானி, டாக்டர் எஸ்.கியூ.ஆர்.இல்யாஸ் முதலிய தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். பெருவாரியான முஸ்லிம் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தள்ள சமாஜ்வாடிக் கட்சியையும் அதன் முதல்வர் அகிலேஷ் யாதவையும் முஸ்லிம்களின் நட்பு வளையத்திலிருந்து பிரித்து சிறுபான்மை சமூகத்தின் எதிரியாக மாற்ற அதிகார வர்க்கத்தின் சில சதிகார கூட்டம் திட்டமிட்டுள்ளதன் சதித்திட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் என சமூகநல ஆர்வலர்களால் கணிக்கப்படுகிறது. அகிலேஷ் யாதவுக்கு வேண்டுமானால் இது முதல் அனுபவமாக இருக்கலாம். ஏற்கனவே முஸ்லிம்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி, ராஜசேகர ரெட்டி, மாயாவதி போன்றோரை சதிச்சூழலில் சில தீய சக்திகள் சிக்கவைத்த சம்பவங்கள் வரலாற்றில் உண்டு.
கருணாநிதி 90களின் இறுதியில், காவல்துறையில் இருந்த சில கறுப்பாடுகளால் முஸ்லிம்களை விட்டு வெகுதூரம் அந்நியப்படுத்தப்பட்டார். 1998ஆம் ஆண்டு கோவையில் நவம்பரில் நிகழ்ந்த காவல்துறை வன்முறை இன்று கருணாநிதி ஆட்சியின் கறையை நீக்க முடியா வரலாறாக மாறிற்று.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பும் அதனைத் தொடர்ந்து சூறையாடப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வும் ராஜசேகர ரெட்டி ஆட்சியின் ஒரு கரும்புள்ளியாக மாறியது. அவ்வாறே ஆஸம்கர் மாவட்டத்தில் அப்பாவி சிறுபான்மை இளைஞர்களைக் கேள்விக் கணக்கின்றி முரட்டுத்தனமாகக் கைது செய்து சித்திரவதை செய்த உ.பி. காவல்துறை மற்றும் பிற மாநில காவல்துறையையும் தட்டிக் கேட்காமல் அல்லது வேண்டுமென்றே மவுனப் பார்வையாளராக இருந்த மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சிறுபான்மையினரிடமிருந்து பிரித்த அதே சக்திகள் அகிலேஷ் யாதவிடம் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளன. அந்த தீய சக்திகளின் சதியாட்டத்தில் அகிலேஷ் யாதவ் மயங்கிடுவாரா? மண்டியிடச் செய்வாரா? நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது...

--ஹபீபா பாலன்

சமுதாயப் பணிக்கு சோர்வில்லை - முபாரக் மஸ்ஊது மதனி

சமுதாயப் பணிக்கு சோர்வில்லை - முபாரக் மஸ்ஊது மதனி


புதியதலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் - அப்துல் சமது (பொதுச் செயலாளர் தமுமுக)

புதியதலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் - அப்துல் சமது (பொதுச் செயலாளர் தமுமுக)



சனி, 2 ஜூன், 2012

பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்

பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்


இந்நாட்டு மக்கள் அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட போர் இந்தப் போரைத் தொடுத்தது சீனாவோ, பாகிஸ்தானோ வேறு எந்த பயங்கரவாத இயக்கங்களோ அல்ல. நம் வரியை வாங்கி நம்மை நிர்வாகம் செய்வதாகவும் நாங்கள் மக்கள்நல அரசாங்கத்தை (Welfare State) நடத்திவருவதாக தம்பட்டம் அடித்துவரும் நமது மத்திய அரசுதான் இந்த இரக்கமற்ற போரைத் தொடுத்துவிட்டது. ஏழைகள், உழைப்பாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு.
சர்வதேச ஏமாளிகளா மக்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மக்களாகிய நாம் சர்வதேச ஏமாளிகள் என்பதை சொல்லாமல் தம் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளது மக்கள்(!) நல மத்திய அரசு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.54 ரூபாய் அதிகரிக்கப்பட்டு மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொண்டுள்ளது மன்மோகன்சிங் அரசு. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ண யித்துக் கொள்ளலாம் என்ற மக்கள் விரோத, மூடத்தனமான முடிவின் மூலம் அரசாங்கம் தங்கள் குடிமக்களின் மீது தீராத வேதனையை ஏவிவிட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 106 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 90 டாலர்களாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்? ஆனால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் அல்லவா? டாலர் பொருளாதாரத்தினால் விளைந்த தீமை!
சர்வதேச எண்ணெய் சந்தையை டாலர் பொருளாதாரத்தினால் நிர்ணயித்ததால் மிகப் பெரிய தீங்கினை நாம் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. முன்னர் 49 பாய் மதிப்பிலான ஒரு டாலர் இப்போது 56 ரூபாய்க்கு மேலே எகிறியுள்ளது. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய்க்காக அதிக அளவு டாலரை செலுத்த வேண்டிய நிலையில் அதனால் ஏறும் விலை ஏற்றம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் விடிகிறது. ஒண்ணும் தெரியல... ஒரு இழவும் புரியல...
ஒண்ணும் தெரியல, ஒரு இழவும் புரியல... இவ்வாறு மனதிற்குள் பாடிக்கொண்டிருப்பவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழு துணைத் தலைவர் (எல்லாரும் திட்டுவதற்கென்றே போடப்பட்ட கமிஷன் போலும்) மாண்டெக்சிங் அலுவாலியா இந்த மூவரும்தான் இவ்வாறு புலம்பித் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
ஊரு உலகமெல்லாம் குறைந்த விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை நமக்கு மட்டும் ஏன் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது? டாலரின் மதிப்பு ஏன் திடீரென ஏறியது?
இந்திய அரசு ஏற்றுமதியை விட இறக்குமதியைத்தான் அதிகம் செய்கிறது. இந்த இறக்குமதிக்கான நாணயம் டாலரில்தான் மதிப்பிடப்படுகிறது.
இறக்குமதிக்காக இந்திய அரசு செய்யும் செலவில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசால் பெட்ரோல் டீசல் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியவில்லை. மாற்று எரிபொருளுக்கான புதிய முயற்சிகளுக்கும் வழியில்லை. ரூபாயின் சரிவைத் தடுக்க இறக்குமதியைக் குறைக்கவும் முடியவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கவும் வழியில்லை. இப்படி இல்லை என்ற சொல்லை மட்டுமே ஏகப்பட்ட ஸ்டாக் வைத்திருக்கும் மத்திய அரசைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
ஏற்கமுடியாத காரணங்கள் இந்தியா பெட்ரோல், டீசலை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால் விலையை மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் சர்வதேச பெட்ரோல் டீசல் விலைகளின் அடிப்படையில் செய்கிறோம். இதை எந்த அடிப்படையில் நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியும்?
மும்பையிலும், அஸ்ஸாமிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்காக போக்குவரத்துச் செலவு இல்லாமல் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் கொண்டுபோய் சேர்ப்பது எதற்காக? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான செலவுகளைக்கூட அந்தப் பண முதலைகளிடம் வசூலிக்காமல் இருக்கும் ஏமாளித்தனம் (அல்லது) கயமைத்தனம் மத்திய அரசுக்குத் தேவையா? சாதாரண சிறிய தொழில் முனைவோர் வரி ஏய்ப்பு செய்தால் பாய்ந்து பிராண்டும் அரசு இயந்திரங்கள், பண முதலைகளிடம் இறக்குமதி செய்யும் செலவுத் தொகையை வசூலிக்காமல் விட்டுக்கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
ஐந்து லட்சம் கோடி மானியம் பெறும் எண்ணெய் நிறுவனங்கள் இந்நாட்டின் ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களாலும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினாலும் மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதால் நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என நீட்டி முழக்கும் அரசியல்வாதிகளும், பன்னாட்டு அடிமைகளாக மாறியுள்ள சில ஊடகங்களும் ஒரு உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரி யாமலே மறைத்திருக்கிறார்கள். அதாவது நாட்டின் ஏழை மக்களை உறிஞ்சி அந்த ரத்தத்தையே எண்ணெயாக விற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொட்டி அழுதுவிட்டு, அதே எண்ணெய் நிறுவனங்களை விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும் என உரிமையும் வழங்கிவிட்டு ஆள்வோர் நாடகம் ஆடுவதை நாட்டு மக்கள் எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட போர், உக்கிரமமான போர் என்பதில் சந்தேகமே இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா? மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றும் முறையிலான கணக்கீட்டு முறையினால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கில் காட்டப் படுகின்றன. இது அப்பட்டமான பொய் என மத்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக நிரூபித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் உள்பட அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய் போன்றே இறக்குமதி வகையில் காட்டப்படும் ஏமாற்றுக் கணக்கு. மேலும் கப்பலில் கொண்டு வரும்போதும், கடலில் கசிந்த எண்ணெய் ஏற்றும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் கழிவு மற்றும் செலவு கணக்கு எல்லாவற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் கிடைக்கும் வண்ணம் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. அரசு அமைத்த குழுக்களே உண்மைகளை வெளியிட்ட பிறகும் அதனை வெளி யிட ஏன் இன்னும் தாமதம்? போட்டி போட்டு விலை உயர்த்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்தி வரி, மேல் சரி போன்றவை 32 சதவீதம் ஆகும். மாநில அரசின் விற்பனை வரி 27 சதவீதம் ஆகும். இவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு லாபம் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்ரோல் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிவருவது என்பதை கடந்த நிதியாண்டு வரி வருவாய் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரிகளை மத்திய அரசு பெருமளவு குறைத்துவிட்டால் மக்களை விலை உயர்வு என்ற துயரில் இருந்து மீட்க முடியும். பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முன்வரும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய் எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து வருடந்தோறும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பெட்ரோலும், 1 லட்சத்து 20 ஆயிரம் டீசலும் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான பெட்ரோல் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இதைப்போன்று இந்திய நாட்டிற்குள்ளே கிடைக்கும் கச்சா எண்ணெய் கூட இறக்குமதியான கணக்கில் காட்டும் கயமைத்தனத்தை என்னவென்பது? பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. ஏற்றப்பட்ட விலை உயர்வு உடனடியாக குறைக்கப்பட வேண்டும். மக்கள் மீது மென்மேலும் துன்பச்சுமைகளை ஏற்றும் எதேச்சதிகார அதிகார வர்க்கத்தை வாக்குச் சீட்டின் வழியாக கணக்குத் தீர்க்க காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

- சில உடனடி தீர்வுகள்
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவகைகளைக் குறைத்தால் விலை குறைக்க முடியும்.
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பணமுதலைகளுக்காகவும் அடிக்கடி வரிவிலக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கும் அரசுகள் மக்களுக்காக எப்போதாவது இந்த வரிச்சுமையைக் குறைத்து விலைகுறைக்க முன்வர வேண்டும்.
இதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்தபோது மத்திய அரசு விலையைக் குறைக்காதது ஏன்? அந்த லாபம் எல்லாம் எங்கே போனது?
நம்மை விட சின்னஞ்சிறு மாநிலமான கோவா முற்றிலுமாக வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயைக் குறைத்துள்ளது. இதனால் கோவா, விலை குறைவைப் பெற்று மகிழ்வதுடன் அதிகப்படியான 5.50 காசு குறைவினைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கோவாவைப் போல் தமிழக அரசும் வரியினைக் குறைத்து பெட்ரோல் கூடுதல் விலை உயர்வை சரிக்கட்ட முயற்சி எடுத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் தமிழக முதல்வரை வாழ்த்தும். பெட்ரோலுக்கான வரிவிதிப்பை குறைப்பதனால் ஏற்படும் இழப்பினை சரிக்கட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கான வரி விதிப்பினை அதிகரிக்கலாம்.

- மாற்று ஏற்பாடு எங்கே?
எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க என்னதான் பாரதூரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் வேகமாக வளரும் ஒரு நாடு மாற்று எரிபொருள் குறித்த திட்டங்களை ஏற்படுத்தாவிட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்களுக்கு எரிபொருளாக ‘எத்தனால்’ பயன்படுத்தினர். நம்நாட்டிலும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வாகனங்களின் என்ஜின்களுக்கு 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் கூட எத்தனால் 85 என்ற பெயரில் வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் 85 சதவீதம், எத்தனால் 15 சதவீதம் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வாகனங்களின் என்ஜின்களில் சிறு மாற்றங்களை செய்தால் போதும். இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவெனில் எத்தனால் எரிபொருளால் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- மக்கள் புரட்சியும் மந்தை ஆட்டு புத்தியும் தாங்க முடியாத விலை ஏற்றத்தில் சீற்றமடைந்த மக்களை திசைதிருப்ப செயற்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் பஞ்சத்தை ஏற்படுத்தி பெட்ரோல் பங்க்குகளை மொய்க்கும் வண்ணம் திசைமாற்றிவிட்ட அவலத்தை என்ன செய்வது?
விண்ணை மட்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சீற்றமடைந்த மக்கள் ஆள்வோரை எதிர்த்து போராடத்தானே முடியும். - இரட்டை வேடம் போடும் சில அரசியல் கட்சிகள்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறோம் என பெயரளவில் சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இவைகள் மத்தியில் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே வேடம் போடுகின்றன. விலையை பெயரளவிற்கு குறைத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- எத்தனால் புறக்கணிக்கப்பட்டது எதனால்?
இந்தியாவில் 560 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் 46 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத ஆலைகளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படாத காலங்களில் எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால் இந்தியா ஓரளவு நெருக்கடியில் இருந்து மீளலாம்.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் அம்பானிகளின் பெட்ரோலிய கொள்ளை லாபத்தை பாதிக்கும் என்பதால் மன்மோகன் அரசால் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டது. எத்தனால் எரிபொருள் எதனால் புறக்கணிப்பட்டது என்பது புரியும்தானே?

--அபுசாலிஹ்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

புது தில்லி: பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது என்று கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். 

இதன் மூலம் கட்சித் தலைவர் நிதின் கட்கரியின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்துள்ளார் அத்வானி.

மதவாதம் பேசி மக்களை பிரித்து எத்தனை வருடங்களுக்கு இப்படி ஏமாற்ற முடியும்.  ராமர் பெயரை சொல்லி பாபர் மசூதியை இடிச்சாச்சி. ரத யாத்திரை முதல் பாகல் பூர், பீவாண்டி தொடங்கி மும்பை வரை பல கலவரங்களை நடத்தி ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்  என்கிற பிரிவினையை உண்டாக்கி மக்களை கூறு போட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதி, காஸ்மீர் தீவிரவாதி, கார்கில் யூத்தம் என்று பல மாய்மாலங்களை உண்டாக்கி அரசியல் நடத்தினார்கள். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்பதற்கு ஏற்ப மக்கள் விழிப்புணர்வு பெற்று பாரதிய ஜனதாவின் சுயரூபத்தை விளங்கி கொண்டார்கள். இதனால் இப்போது செல்லா காசாகி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. 

இதைத்தான் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் பல இரத்த யாத்திரைகளை நடத்திய, கலவரங்களை கண்ட தேசிய நாயகன் அத்வானி  திருவாய் மலர்ந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவாரின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். மக்கள் பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சிக்கு  ஒரு மாற்று சக்தியாகவே முதலில் கருதி ஆதரவு கொடுத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் அவர்களை விட ஊழலில் பன்மடங்கு சிறந்து விளங்குவதோடு மற்றும் அல்லாமால் மதவாதத்தில் மூழ்கி கிடப்பதால் பாரதிய ஜனதாவை மக்கள் ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள்.